புதுடெல்லி: தேசிய திறன் தேடல் தேர்வு திட்டம், மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய திறன் தேடல் தேர்வு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (என்சிஇஆர்டி) நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் இந்த திட்டத்துக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 11 இந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திறன் தேடல் தேர்வு திட்டம், 31 மார்ச் 2021 வரை அங்கீகரிக்கப்பட்டது.
தற்போதைய வடிவத்தில் இந்த திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால், மறுஉத்தரவு வரும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உதவித்தொகைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் உதவித்தொகையின் அளவை அதிகரிப்பது போன்ற அம்சங்களுடன் என்டிஎஸ்இ தேர்வை மறுசீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.