புதுடெல்லி: பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த புருஷேத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருந்தாலும் கூட, போதிய பாதுகாப்பின்மை நிலவுகிறது. மாணவ, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. எனவே அரசுப்பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இம்மனுவானது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்கக் கூடியதுதான். ஆனால் இம்மனுவின் சாரம்சம் தொடர்பான கோரிக்கைகளை தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் முறையிட வேண்டும். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மனுதாரருக்கு அதில் திருப்தி ஏற்படாதபட்சத்தில் அப்போது அவர் நீதிமன்றத்தை நாடலாம்’ என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.