
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில், தஞ்சை மருத்துவக் கல்லூரி, தஞ்சை மேற்கு, தஞ்சை தாலுகா, தஞ்சை கிழக்கு, ஒரத்தநாடு, புதுக்கோட்டை காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத 24 ஆண்கள், 6 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 32 உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் ஒரு வாரத்தில் அடக்கம் செய்யப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மாதக்கணக்கில் ஆகியும் இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால், 32 உடல்களையும் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து அந்த 32 உடல்களையும் வாகனத்தில் ஏற்றி சாந்திவனம் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு, பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு அதில் 32 உடல்களும் அடுக்கப்பட்டன. தொடர்ந்து, இறந்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களும் செய்யப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் கூறுகையில், “நான் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய பணிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த 3 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான அனாதை உடல்களை நானும், ஏட்டு ரகுநாதனும் எங்கள் செலவில் அடக்கம் செய்துள்ளோம்.

தற்போது எங்களுடன் மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமும் இணைந்து அடக்கம் செய்வதற்கு உதவி செய்துள்ளது. ரகுநாதன் தற்போது வேறு காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகி சென்று விட்டார். இறந்தவர்களின் உடலைக் கேட்டு யாரும் வராததால் நாங்கள் இதை ஒரு சேவையாக கருதி செய்து வருகிறோம்” என்றார்.
மூன்று ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ள தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டு ரகுநாதன் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.