வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது குடும்பத்துடன் நிறுவனத்தில் தங்கி கடந்த 2 ஆண்டாக ஹெல்பர் வேலை செய்து வந்தார். இதேபோல், திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியை சேர்ந்த சிவமுருகனும் (49) கடந்த இரு மாதமாக அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விடுமுறை என்பதால் இருவரும் மது வாங்கி வந்து நிறுவன வளாகத்தில் வைத்து குடித்தனர். அப்போது தண்ணீர் தேவைப்பட்டதால், அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் போன்ற ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்து மதுவுடன் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். இது குறித்து வெள்ளக்கோவில் போலீ சார் விசாரிக்கின்றனர்.
