திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் கடல்பாசியில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியை சேர்ந்த ரவி (57), தனது மனைவி ஜோதி (55), மகன் பாலமுருகன் (20) ஆகியோருடன் கம்பெனி வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
அதேபோல் மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் (53) என்பவரும் இந்த கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்தார். சிவமுருகனுக்கு, உமாராணி (47) என்ற மனைவி உள்ளார்.
நண்பர்களான ரவியும், சிவமுருகனும் நேற்று முன்தினம் இரவு மது அருந்த முடிவு செய்தனர். இதற்காக கம்பெனி அருகே அமர்ந்த அவர்கள் வெள்ளை பாட்டிலில் இருந்த ரசாயனத்தை தண்ணீர் என்று நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் சத்தம் போட்டுள்ளனர். மேலும் ரவி தனது மகன் பாலமுருகனிடம் நடந்த விவரத்தை கூறினார்.
உடனே பாலமுருகன் தனது கம்பெனி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு கார் மூலம் முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் என்று நினைத்து மதுவில் ரசாயனத்தை கலந்து குடித்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.