சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில், சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அர்ணவ்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
‘செவ்வந்தி’ எனும் தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மா’ தொடரில் நடித்து வரும் அரணவ் என்பவரும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியான தன்னை அரணவ் அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், அரணவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பதிலுக்கு அரணவ், தனது தரப்பு நியாயங்களை கூறி திவ்யா மீது புகார்களை அளித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் அர்ணவ்க்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.