கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார்.
இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, இந்த வீடியோ ஆதரத்தை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர் விசாரணையில் மாணவி ப்ளஸ் 2 படிப்பதும், தாலி கட்டிய மாணவன் அங்குள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் போலீசார், வீடியோவில் இருந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 நாட்கள் கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு தாலி காடிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை கைது செய்தனர். இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்துள்ளனர்.
மேலும், பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.