தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 20-ம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 10-ம் தேதி காலாண்டு விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார்.
திங்கட்கிழமை விடுமுறை வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மாவட்ட ஆட்சியருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்ப தொடங்கியுள்ளனர். ஏராளமான மாணவர்கள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியருக்கு லீவ் வேண்டும் மேம் என மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இன்னும் சில மாணவர்கள் ஒரு படி மேலே சென்று உங்களுக்கு கோவிலே கட்டுகிறேன் ஒரு நாள் லீவ் மட்டும் விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.