
செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வரும் திவ்யா, செல்லம்மா என்ற சீரியலில் நடித்து வரும் அர்னவ் ஆகியோர் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீப காலமாக திவ்யா மற்றும் அர்னவ் இடையே கடுமையான பிரச்சனைகள் நடைபெற்று வருவதால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில், தன்னை அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க அர்னவ் திட்டமிட்டதாக கூறி நடிகை திவ்யா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அர்னவ், என்னுடைய மனைவி திவ்யா எனக்கு வேண்டும். சிலரின் தூண்டுதலின் பேரில் தான் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்று கூறினார். அதோடு நடிகை திவ்யா கருவை கலைப்பதற்கு திட்டமிட்டு தான் இப்படி ஒரு பழியை தன் மீது போட்டதாகவும் அர்னவ் கூறியிருந்தார்.
இந்த குற்றங்களுக்கான ஆதாரங்களையும் அர்னவ் மற்றும் திவ்யா இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், நடிகை திவ்யா தன்னுடைய கணவரான அர்னவ் மீது மகளிர் ஆணையம் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தார். இந்நிலையில், திவ்யா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில மகளிர் ஆணையம் தானே முன்வந்து தலையிட்டுள்ளது.
இது குறித்து திவ்யாவின் வழக்கறிஞர் பிரியா கூறுகையில், “அர்னவ் அளித்த சில பேட்டிகளைப் பார்த்துட்டு, தானே முன்வந்து தலையிட்டிருக்கு கர்நாடக மகளிர் ஆணையம். அங்க இருந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு திவ்யாவுக்கு சட்ட ரீதியா உதவக் கேட்டிருக்காங்க.
உடனே, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி எங்களைத் தொடர்பு கொண்டு கமிஷனுக்கு வரச் சொன்னாங்க. நாங்க போனோம். முறைப்படி புகாரும் தந்திருக்கிறோம். அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணையத் தொடங்கி இருக்காங்க.
மகளிர் ஆணையத் தலையீட்டுக்குப் பிறகு வழக்கு வேகமெடுத்திருக்கிறது. இருந்தாலும், காவல் துறையினர் சாதாரண, அதாவது சுலபமா ஜாமீன்ல வெளிவரக் கூடிய செக்ஷன்களைப் போட்டு வழக்கை நீர்த்துப் போக வச்சிடுவாங்களோங்கிற அச்சமும் எங்களுக்கு இருக்கு” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்துக்கு தமிழகம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறதென்பதால், விவகாரத்தை சீரியஸாக அணுகுமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் போலீசாரைக் கேட்டுக் கொண்டிருப்பதால், போலீசாரும் சுறுசுறுப்பாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். அநேகமாக, அடுத்த சில தினங்களில் அர்னவ் மீது கைது நடவடிக்கை பாயலாம் எனத் தெரிகிறது.