நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் வெகு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்று இருவரும் முடிவெடுத்து இருந்தனர். அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன.
மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியின் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அத்துடன், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பெற்ற உடன் அதில் விதிமீறல் இருக்கிறதா, முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.