மதுரை; ‘‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்துகிறார்’’ என நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்கியா மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்ர்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இதில் தலைமை வகித்தார்.
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “மக்கள் நலன் சார்ந்த சிந்தனை, மனிதநேயம், இரக்கம் ஆகிய மூன்று பண்புகள் தலைசிறந்த தலைவர்களின் அடையாளமாகும். முதலமைச்சர் இந்த 3 பண்புகளையும் முன்னிருத்தி பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 3 திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, கர்ப்பிணித் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். அவர்களுக்கு சரியான முறையில் ஊட்டச்சத்து கிடைப்பதால் பிறக்கின்ற குழந்தையும், கர்ப்பிணிகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இரண்டாவதாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறப்பாக செயல்படுத்தி, சிகிச்சை பெற வருபவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பது.
மூன்றாவதாக, முதன்மைக் கல்வியை அனைவருக்கும் சிறப்பான முறையில் கிடைக்கப்பெற செய்வதாகும். வளர்ச்சியை நோக்கி செல்லும் சமுதாயத்திற்கு, நாட்டிற்கு அடித்தளமாகவும், உட்கட்டமைப்பாகவும் அமையக்கூடிய திட்டமாக இந்த 3 திட்டங்களும் விளங்குகிறது.
பெண்கள் அவர்களது திருமண வயதிற்கு முன்பாக மிக இளம் வயதில் திருமணம் செய்வதால் அவர்களுக்குக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். கரோனா காலக்கட்டத்தில் அதிகளவில் வளரிளம் பெண்கள் திருமணம் நடைபெற்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேதனைக்குரிய செய்தியாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.