சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள், தி.நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி-காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை இளைஞர் சதீஷ் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சதீஷின் டார்ச்சர் காரணமாக மாணவி மனவேதனையடைந்தார். இது குறித்து குடும்பத்தினரிடமும் கூறினார். .

இதையடுத்து மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சதீஷை அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சில தினங்களுக்கு முன்பு மாணவி படிக்கும் கல்லூரிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகவலையும் மாணவி, குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் குடும்பத்தினர் இனிமேல் பிரச்னை செய்தால் மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல மாணவி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த சதீஷ், அவரிிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு நடந்த சமயத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மாணவியின் அலறல் சத்தம் அங்கு கேட்டது. பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவி, தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரை, இளைஞர் ஒருவர் ரயில் முன் தள்ளிவிட்டு ஓடிவிட்டதாக பயணிகள் மத்தியில் காட்டு தீ போல தகவல் பரவியது. மாணவியுடன் தகராறில் ஈடுபட்ட சதீஷிம் அங்கு இல்லை.

இதையடுத்து தி.நகர் ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரின் சடலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து சதீஷை தேடிவருகிறார்கள். ரயில்வே போலீஸாரும் பரங்கிமலை போலீஸாரும் இணைந்து இந்த வழக்கில் சதீஷ் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து தி.நகர் ரயில்வே போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் தேடப்படும் சதீஷும், அந்த மாணவியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் மாணவியுடன் சதீஷ் சிறுவயது முதலவே நன்றாக பழகிவந்திருக்கிறான். பருவமடைந்த பிறகுதான் சதீஷ், மாணவியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறான். ஆனால், அவர் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

படித்துவிட்டு விமான நிலைய கார்கோவில் சதீஷ் பணியாற்றி வந்திருக்கிறார். அந்த மாணவி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். சதீஷின் டார்ச்சர் காரணமாக மாணவிக்கு அவர் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அதைத் தெரிந்துக் கொண்ட சதீஷ், அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மாணவியை, சதீஷ்தான் ரயிலில் தள்ளிக் கொலைசெய்தார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அது தொடர்பாக அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்திவருகிறோம். மேலும் சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இருப்பினும் சதீஷிடம் விசாரித்தால் மட்டுமே மாணவி எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரும்” என்றனர்.
இது குறித்து அங்கிருந்த சில பயணிகள் ரயில்வே போலீஸாரிடம் , “இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ரயில் வரும்போது தள்ளி விட்டதை பார்த்தோம். அதனால் இது கொலைதான்” என்று சாட்சி அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் சதீஷ்மீது கொலை வழக்கு பதிவுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.