கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை இருந்து வந்தது.
இதையடுத்து, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் முயற்சியால் சுமார் ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றியக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அதன்பிறகு இவ்விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது, “பண்ருட்டி மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், சட்டசபை தொகுதிகளில் பத்து கோரிக்கைகளை பெற்று அதை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடப்பதால் இதற்காக வேப்பூர் – இராமநத்தம் இடையே அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், மங்களூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையமும், சிறுபாக்கத்தில் புதிய மருத்துவமனையும் அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் சுமார் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் சுமார் 80 கிராமங்கள் பயன்பெறும் வகையில் நீர்த்தேக்கமும் சீரமைக்கப்படும். அரசு செயல்படுத்தி வரும் திட்டப்பணிகளை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதையடுத்து, திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மங்களூர் ஒன்றியம் தொண்டங்குறிச்சி கிராமத்தில் ரூ.7.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சிமன்ற கட்டிடம் மற்றும் ஐவனூரில் 8.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலை கட்டடத்தையும் அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.