“சாத்தான் வேதம் ஓதக்கூடாது; அதிமுக வரலாற்றில் ஓ.பி.எஸ் ஒரு கரும்புள்ளி!" – சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக-வின் 51-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “ `அதிமுக-வின் சட்டத்திட்டங்களை மாற்றினால் எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது’ என்று இன்றைக்கு சொல்லுகின்ற ஓபிஎஸ்-க்கு… அம்மாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக-வை முடக்கிய ஓபிஎஸ்-க்கு… அம்மா, எம்.ஜி.ஆர், அதிமுக பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது. சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உரிமையும் ஓ.பி.எஸ்-க்கு கிடையாது. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. இதை பற்றி சொல்வதற்கு சில தகுதிகள் வேண்டும். அந்த தகுதி, தராதரம் ஓ.பி.எஸ்-க்கு இல்லை.

எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சி.வி.சண்முகம்

பராசக்தியின் வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்ற பன்னீர்செல்வம் அவர்கள், சட்டமன்றத்திலே ஸ்டாலினை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று எம்.பி-யாக இருக்கும் அவர் மகன் ரவீந்திரநாத், ‘அதிமுக-வை அழிக்க வேண்டும்’ என கங்கணம் கட்டிக் கொண்டுள்ள தி.மு.க ஸ்டாலினை சந்தித்து… `உங்கள் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது’ என்கிறார். அப்படி சொன்ன அவருக்கும், ஓ.பி.எஸ்-க்கும் அதிமுக பற்றி பேச அருகதையே கிடையாது.

‘விதிகளைத் திருத்தக் கூடாது’ என சொல்லும் ஓ.பி.எஸ் அவர்கள், அவருடைய சுயலாபத்திற்காக, எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து 2017-ல் மாற்றினார். அதுவரையில் கட்சியிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வேண்டும் என்று சொல்லி கொண்டுவந்தது யார்? இந்த ஓ.பி.எஸ்-தான். அவர் சொன்னதிலே ஒன்று உண்மை. எம்.ஜி.ஆர், அம்மா-வின் ஆன்மாக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மன்னிக்காது, மன்னிக்காது..!

ஓ.பி.எஸ், சி.வி.சண்முகம்

கருணாநிதியை ஒழிக்கவேண்டும், அந்த குடும்பத்தை நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும், திமுக ஒரு மக்கள் விரோத இயக்கம் என்று சொல்லி தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. ஆனால் இந்த இயக்கத்தின் வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளி ஓ.பி.எஸ். அவர்களுக்கு அ.தி.மு.க, எம்.ஜி.ஆர்., அம்மா பற்றி பேசுவதற்கோ… இரட்டை இலை மற்றும் சட்ட விதிகளைப் பற்றி பேசுவதற்கோ எந்த தகுதியும், தராதரமும் இல்லை” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.