சென்னையில், மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள், மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தால் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் இருந்த 10 கம்ப்யூட்டர்கள், முக்கிய கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் ஏரிந்தது சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.