மூழ்கப் போகும் பெங்களூரு… எல்லாரும் வீட்லயே இருங்க- வந்தது மஞ்சள் அலர்ட்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாலை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நகரின் நாலாபுறமும் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பல இடங்களில் கார்கள் மழைநீரில் சிக்கி சேதமடைந்துள்ளன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை வெளுத்து வாங்கி விட்டது.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹெச்.ஏ.எல் விமான நிலையம், மகாதேவபுரா, தொட்டானேகுண்டி, சீகாஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 60 முதல் 80 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. குறிப்பாக அடித்தளத்தில் அமைந்துள்ள பல பார்க்கிங் பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

மெஜஸ்டிக் அருகிலுள்ள சுற்றுச்சுவர் ஒன்று மழையில் இடிந்து விழுந்ததில் அங்கே பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பெங்களூரு தள்ளாடிய நிலையில் அதிலிருந்து பாடம் கற்பதற்குள் மீண்டும் ஒரு மழை புரட்டி போட்டு வருகிறது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டது.

பெங்களூரு இப்படி ஆவதற்கு யார் காரணம்? சரியாக வேலை செய்யாதது யார்? எனக் கேள்விகள் கேட்டு மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். நேற்று பெய்த கனமழையை தொடர்ந்து அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் சர்வதேச ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் நீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதில் குடியிருப்புகளும் விதிவிலக்கல்ல. கடந்த முறையை போலவே மீட்பு பணிகளில் ட்ராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அலுவலகங்கள், குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையில் வானிலை ஆய்வு மையமானது மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஊழியர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவில் அதிகபட்சமாக 1,696 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. இது நடப்பாண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 1,706 மில்லிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் புதிய வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.