கிரிக்கெட் வீரர் தோனியின் ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது

பீகார்: கிரிக்கெட் வீரர் தோனியின் ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல்.

மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.