லண்டன் : பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், 42, போட்டியின்றி தேர்வானார்.
பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார்.
ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடானது. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகிய இருவரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இதற்கிடையே,பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையின் தலைவரும், பெண் எம்.பி.,யுமான பென்னி மோர்டார்ட், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார்.
வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
இதையடுத்து, ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகரித்தது. அவருக்கு, 178க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் ஆதரவு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பென்னி மோர்டார்ட் போட்டியிலிருந்து விலகினார்.இதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் போட்டியின்றி கட்சித் தலைவராக தேர்வானார். இவர், பிரிட்டனில் வெள்ளையர் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபெருமையை பெற்றுள்ளார்.
மக்களுக்காக உழைப்பேன்
பிரிட்டன் பிரதமராக தேர்வான ரிஷி சுனக் நேற்று கட்சியின் தலைமை அலுவலகம் வந்தார். நிர்வாகிகள் அவரை வரவேற்று வாழ்த்தினர். ரிஷி சுனக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நான் பிரதமரானது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். பிரதமர் பதவியை வழங்கியதற்காக நான் நாள் முழுவதும் உழைப்பேன். நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன். நமக்கு இப்போது ஒற்றுமையும் தேவை.
கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். அதுதான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி வாழ்த்து
இங்கிலாந்து புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்