அடிலெய்டு: டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லீக் சுற்றில் இன்று தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஆனால், ஆரம்பம் முதலே தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்தின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்ரிக்கா ரன் எடுக்க முடியாமலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தும் தடுமாறியது.
இறுதியில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்ரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றிபெற்றது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
அரையிறுதியில் பாக்.,
இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தது. ‛குரூப்-2′ பிரிவில் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தை பாகிஸ்தான் பிடித்தது.
இன்று அடுத்ததாக மோதவுள்ள இந்தியா – ஜிம்பாப்வே போட்டியின் முடிவின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் மாற்றம் இருக்கலாம். இந்திய அணி வெற்றிப் பெற்றால் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடிப்பதோடு, நவ.,10ல் நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோதும். ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா தோல்வியுற்றால், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடிப்பதோடு, நவ.,9ல் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement