ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மதியரசு (20) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
இவரது மகன் மதியரசு கோபியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். லாவண்யா பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தாமதமாக சேர்ந்துள்ளார். செல்வி அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு தேர்வு தொடங்கியதால் லாவண்யா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே லாவண்யா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் செல்வி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். மதியரசு கல்லூரிக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த லாவண்யா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மதியரசு தங்கை லாவண்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.