காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் இடைவிடாத தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மழையால் கடுமையான குளிர் நிலவி வருகிறது. சுற்றுலாத் தலங்களும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. மழை மேலும் தீவிரமடைந்தால் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், “மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுக்காவுக்குட்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பேரிடர் அபாயம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணித்து வருகிறோம். நாளையும் மழை தொடர வாய்ப்பிருக்கிறது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து மீட்புக்குழு நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.