கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் டிஸ்மிஸ்: கேரள அரசு அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கானை டிஸ்மிஸ் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் சமீப காலமாக மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களை நேரடியாக அவர் விமர்சித்து வருகிறார். தனது விருப்பத்திற்கு மாறாக செயல்படும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து விடுவேன் என்றும் எச்சரித்தார். சமீபத்தில் கேரளாவில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை உடனடியாக பதவி விலக அவர் கெடு விதித்தார். இதை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கவர்னரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள கவர்னர் மாளிகை முன்பு 1 லட்சம் பேர் கலந்துகொள்ளும் போராட்டத்தை நடத்த இடது முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்கிடையே கவர்னர் ஆரிப் முகம்மது கானை கேரளாவில் உள்ள 14 பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கு கேரள அரசு நடவடிக்கைகளை தொடங்கியது. இது தொடர்பாக அவசர சட்டத்தை கொண்டு வர கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த மாதம் சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்தி, அதில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக திருச்சூரில் உள்ள கலாமண்டலம் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு சட்டத்தின் படி நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தும் அமைப்பே வேந்தரை நியமிக்கலாம். திருச்சூர் கலாமண்டலம் பல்கலைக்கழகத்தை கேரள அரசு தான் நடத்தி வருகிறது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை அதிரடியாக நீக்க கேரள அரசு தீர்மானித்தது. இனி கவர்னருக்கு பதிலாக கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் வாசவன் வேந்தராக இருப்பார்.

இந்தப் பல்கலைக்கழகம் கேரள கலாச்சாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கலாசாரத் துறையை சேர்ந்த ஒருவரை இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கவர்னர், கேரள அரசு மோதல் மேலும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.