சென்னை | 'அடாத மழையிலும் விடாது பணி' – மழைநீர் அகற்றும் ஊழியர்களை நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் அரசு ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அந்த பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டினார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!. அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.