'நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள்'.. நளினியின் முதல் பேட்டி..!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டி, நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலையாகியுள்ள 6 பேரில் ஒருவரான நளினி, நியூஸ் 18, விகடனுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை இருந்தது. தமிழ்நாடு அரசுக்கு கடமை பட்டுள்ளோம். சத்தியம், உண்மை ஜெயிக்கும் என்று நினைத்தோம். 6 பேரும் விடுதலையானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

32 வருடங்களாக மறக்காமல் இருந்து ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன். நாங்கள் 6 பேரும், பேரறிவாளனும் எந்த தவறும் செய்யாதவர்கள் என்பதால் உண்மை மீது நம்பிக்கை இருந்தது. 32 வருடங்களாக சிறையில் இருந்துள்ளோம், இனிமேல் என்ன சந்தோசம்? என கூறிய நளினி நாங்கள் ஆறு பேரும் அவரவர் குடும்பத்தினருடன் சேரவுள்ளது மகிச்சியளிக்கிறது என்றும் எனது மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நளினியின் தாய் பத்மா கூறும்போது, சிறையில் இருந்த அந்த ஏழு பேர்ல ஒரு பெண்ணாக் கிடந்து அத்தனை துயரங்களையும் என் மகள் அனுபவிசிருக்கா. என் மகளை விடுதலை செஞ்ச உச்ச நீதிமன்றத்துக்கு, அங்க உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த வழக்குல வாதாடிய வழக்கறிஞர்கள், இப்போதைய, அப்போதைய தமிழ்நாடு அரசு, ஆதரவு தந்த அரசியல் கட்சி தலைவர்கள், எங்களுக்காக இரக்கப்பட்டவங்க, குரல் கொடுத்தவங்க அத்தனை பேருக்கும் கை கூப்பி நன்றியை சொல்லிக்கிறேன் என்று நளினியின் தாய் இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.