தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் வசிக்கும் பீடி தொழிலாளியின் மகள் ஹரிகா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கான இடத்தையும் பிடித்துள்ளார்.
தன்னுடைய ஆறரை வயதிலேயே தந்தையை இழந்தவர் ஹரிகா. பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளார் இவரின் தாய். சிறு சிறு வேலைகளைப் பார்த்து, ஹரிகாவையும், அவரின் சகோதரரையும் படிக்கவைத்துள்ளார்.

நிசாமாபாத் ஹோலி மேரி உயர்நிலைப் பள்ளியில் ஹரிகா படித்துக் கொண்டிருந்தபோது, அப்பள்ளியின் கரஸ்பான்டன்ட், இவர்களின் நிலை கண்டு கனிந்து குறைந்த கட்டணத்திலேயே படிக்க அனுமதித்துள்ளார். அதோடு கரஸ்பான்டென்ட்டின் மகள் மருத்துவப்படிப்பில் சேர்ந்ததைப் பார்த்து, தானும் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் ஹரிகாவின் மனதில் ஊன்றியுள்ளது.
10-ம் வகுப்பில் 9.5 சராசரி கிரேடு புள்ளிகள் எடுத்ததால், காகடியா ஜூனியர் கல்லூரியில் இலவச இடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு 2020-ம் ஆண்டில் முதன்முறையாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதியும் மீண்டும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார்.
அதன் பின் தன்னுடைய உறவினரிடம் இருந்து அலைபேசியை வாங்கி, யூடியூப் வீடியோக்களை பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2022-ல் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் 40,958வது இடத்தையும், மாநில அளவில் 703வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இவருக்கு சித்திப்பேட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Dare to dream and then never stop working until you achieve them.
This is the story of Harika,who passed and excelled in the MBBS exams via YouTube videos. I met her and her mother and extended my support towards her dreams by handing over the first installment of her fees
(1/2) pic.twitter.com/8NIUqSk91e— Kavitha Kalvakuntla (@RaoKavitha) November 9, 2022
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்டமன்ற உறுப்பினருமான கவிதா கல்வகுந்த்லா, ஹரிகாவின் படிப்பிற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டவர், “கனவு காணத் துணியுங்கள், பின்னர் அவற்றை அடையும் வரை அதற்கான வேலையை நிறுத்தாதீர்கள். யூடியூப் வீடியோக்கள் மூலம் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கும் ஹரிகாவின் கதை இது. நான் அவரையும் அவரின் தாயையும் சந்தித்து, கட்டணத்தின் முதல் தவணையை ஒப்படைத்து அவரது கனவுகளுக்கு எனது ஆதரவை வழங்கினேன்.
அவரவர்களின் கனவுகளை வாழத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நபருக்கும், நிசாமாபாத்தைச் சேர்ந்த பீடித் தொழிலாளியான ஒற்றைத் தாயின் மகள் ஹரிகா ஓர் உத்வேகம். அவர்களை சந்தித்தது மற்றும் அவர்களது நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக மாறுவது, உண்மையிலேயே ஆசீர்வாதம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் ஹரிகா!