“இந்தி தெரிந்தவர்கள் எல்லாம் இங்கு தமிழகத்தில் ரோடு போடும் வேலை செய்து வருகின்றனர்” என ஓமலூரில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொது கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் ஆதிக்க இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொது கூட்டம் ஓமலூரில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துபவர்கள், இந்தி தெரிந்தவர்கள் வட மாநிலங்களில் வேலை கிடைக்காமல் தமிழகத்தில் அதிகளவில் வேலைக்கு வந்திருப்பதை எண்ணி பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகள் சற்று அழிந்து வரும் நிலையில், அறிஞர் அண்ணா வகுத்த இருமொழி கொள்கை தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. இதனை பொறுத்து கொள்ள முடியாத ஒன்றிய அரசு, தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் வரலாறு, திமுகவின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். அரசு அலுவலகங்களில் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக வருவதற்கு காரணம் திமுக என்றும் உய்ரநீதிமன்றத்தில் பிராமணர்கள் அல்லாதவர்கள் நீதிபதிகளாக பணியாற்றுவதற்கு கலைஞர் தான் காரணம். இந்தியை திணிக்க முயற்சித்தால் ஒரு நாளும் தமிழகம் அனுமதிக்காது” என்றார்.
தொடர்ந்து கோவை கார் வெடி விபத்து குறித்து பேசுகையில், “அந்த வழக்கை திசை மாற்றும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். இதனை நிறுத்தி கொள்ள வேண்டும். பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்படுகிறது. இந்த கட்சியுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. தமிழையும், தமிழ்நாட்டையும் காப்பற்றும் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்” என்று கேட்டு கொண்டார். இந்த கூட்டத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் கார்த்திகேயன், ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM