“முற்றிலும் தவறானது…” – நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முற்றிலும் தவறானது, சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.


— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 11, 2022

வழக்கு பின்னணி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.