அய்யய்யோ இதுலயுமா… உதயநிதிக்கு ஷாக் கொடுத்த துணிவு?

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத்துடன் துணிவு என்ற படத்தில் நடித்திருக்கிறார் அஜித். இவர்களது கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, “துணிவு படத்தை நாங்கள் வெளியிடுவதற்கான ஒப்பந்தம் 4 மாதங்களுக்கு முன்னரே போடப்பட்டுவிட்டது. அப்டேட் வரும்வரை நாங்கள் சொல்லாமல் இருந்தோம். அதை சொன்னவுடன் எல்லோரும் ஷாக்காகிவிட்டார்கள். துணிவு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.

போனி கபூர் சாரிடம் முதலில் நான் கேட்டது, ‘சார் இந்தப் படத்துலயும் பைக் ரேஸ்லாம் நிறைய இருக்கா’ என்பதுதான். அதற்கு அவர் பைக் ரேஸும் இருக்கு எல்லாமும் இருக்கு என்றார்” என கூறினார்.

மங்காத்தா படத்திலிருந்து பெரும்பாலும் அஜித்தின் படங்களில் பைக் தொடர்பான ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தக் காட்சிகள் தொடக்கத்தில் ரசிக்கப்பட்டாலும் போகப்போக ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தின. அதற்கு காரணம் ஒரேமாதிரியான பைக் ஸ்டண்ட்டுகளை வைத்தால் அதையே மீண்டும் மீண்டும் எத்தனை படங்களில்தான் பார்ப்பது. கதைக்கு தேவைப்பட்டால் வைக்கலாம். ஆனால் அஜித்தின் Passion பைக் என்பதாலேயே இதுபோன்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள் வலிந்து வைக்கப்படுவதுபோல் தெரிகிறது என்கின்றனர் ரசிகர்கள்.

பைக் ஸ்டண்ட் காட்சிகள் அஜித்தின் படங்களில் தொடர்ந்து வைக்கப்படுவதால் ரசிகர்களுக்கு வந்திருக்கும் சலிப்பு உதயநிதிக்கும் வந்திருக்கிறது. அதனால்தான் பதறிப்போய் பைக் ரேஸ் இதிலும் இருக்கிறதா என  போனி கபூரிடம் முதல் கேள்வியாக கேட்டிருக்கிறார். அதற்கு போனி கபூரின் பதில் நிச்சயம் உதய்க்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என கூறி இந்த வீடியோவை பலர் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.