சாந்தன்: மரண தண்டனை உத்தரவு, உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் முதல் விடுதலை உத்தரவு வரை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 7 பேரில் ஒருவர் சுதேந்திரராஜா என்ற சாந்தன். இந்த வழக்கில் 1991 ஜூலை 22 அன்று கைது செய்யப்பட்ட சாந்தன், ஏறக்குறைய 30 ஆண்டு காலம் சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, சாந்தன், இலங்கையில் இருந்து சிவராசன் (படுகொலை திட்டத்தினை வழிநடத்தியவர்) மற்றும் சிலருடன் படகில் இந்தியாவிற்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம், சாந்தனைப் பொறுத்தவரை, தன் மீதான வழக்கு அடையாள மாறுபாட்டால் தொடுக்கப்பட்டது எனக் கருதுகிறார்.

தாம் ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை என்றும், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கிலேயே தமிழகம் வந்ததாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் சாந்தன் குறிப்பிட்டிருந்தார்.

“அந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இந்தியா வந்துதான் வெளிநாடுகளுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன்தான் வந்தேன்.

சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா?

இந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதிடும்போது, விடுதலைப் புலிகள்அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும். என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்” என அந்தக் கடிதத்தில் சாந்தன் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், இந்தக் கடிதம் எழுதிய 6 ஆண்டு காலத்துக்குப் பின்னர்தான் சாந்தனின் விடுதலை சாத்தியமாகி உள்ளது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தால் விடுதலை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. சிறையில் வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் எனச் சொல்லப்படுகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.