சென்னையில் தேங்கிய மழை நீர்: இரவு பகல் பாராமல் களத்தில் நிற்கும் மாநகராட்சி ஊழியர்கள்!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 1510 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும்.

சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமானநிலையத்திலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் வேளச்சேரி பகுதிக்கு சென்றார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே!

சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே!

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது!” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.