மயிலாடுதுறையில் வரலாறு காணாத மழை; டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது: விவசாயிகள் கவலை

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த 10ம்தேதி இரவு துவங்கிய மழை நேற்று வரை விடிய விடிய இடைவிடாமல் பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சீர்காழியில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவானது. இதனால் மாவட்டம் முழுவதும் விளை நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இப்பகுதிகளில் 65 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. 400 ஏக்கர் வாழை தோப்புகளில் தண்ணீரில் தேங்கி நிற்கிறது. முன்பு பெய்த மழையால் மூழ்கிய நெற்பயிர்களை தண்ணீரை வடிகட்டி, உரங்கள் இட்டு காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்து நெற்பெயர்கள் நீரில் மூழ்கியுள்ளது விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில்  இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களும், தஞ்சாவூர் ரெட்டிபாளையம், பூதலூர், கள்ளப்பெரம்பூர், ஒரத்தநாடு தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் 10ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் 7ஆயிரம் ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் 5ஆயிரம் ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. டெல்டாவில் மொத்தமாக 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. தொடர் கனமழையால் மயிலாடுதுறையில் தாழ்வான இடங்களில்  500 குடியிருப்புபளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்திலிருந்து சீர்காழி செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கி உள்ளது.

இதனால் இந்த சாலை வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல வீடுகள் இடிந்தன. கடல் சீற்றம் மற்றும் கடலில் பலத்த காற்று தொடர்ந்து வீசுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் ஒரு லட்சம் மீனவர்கள் நேற்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகு, பைபர் படகுகள் கடல்நீரில் மூழ்கின. கொடைக்கானலில் மண்சரிவு; மரங்கள், மின்கம்பம் சாய்ந்தன: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. பல இடங்களில் மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்தன. நேற்று அதிகாலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை, நண்பகல் முதல் மீண்டும் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக வெளுத்து வாங்கியதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  

வத்தலகுண்டு பிரதான சாலையில் சீனிவாசபுரம், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளின் அருகே சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் பிரதான சாலையில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் இந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து சீரானது. கம்பம்மெட்டு: தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் தமிழக – கேரள எல்லையில் கம்பம்மெட்டு மலைச்சாலையில் உள்ள 16வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று மாலை 3 மரங்கள் மண்சரிவு ஏற்பட்டு முறிந்து விழுந்தது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மரங்களை நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை மற்றம் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மின்னல் தாக்கி பெண் பலி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் கடந்த 2 நாட்களாக   பலத்த மழை பெய்து வருகிறது.  வந்தவாசி அடுத்த புதுவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சொர்ணம் (38) என்பவர் நேற்று காலை 11.30 மணியளவில்  மாடுகளை ஓட்டிக்கொண்டு விவசாய நிலத்தில் கட்ட சென்றார்.  அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சொர்ணம் பரிதாபமாக பலியானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.