சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருள்களுக்கு முழு தடை!

சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது.
image
டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. சபரிமலை தரிசனத்திற்காத இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலை கோயில் வளாகம், பம்பை, திரிவேணி, மரக்கூட்டம், சபரி பீடம் உள்ளிட்ட பகுதிகள், பெரிநாடு மற்றும் கொல்லமூலா பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய ரான்னி தாலுகா பகுதி உள்ளிட்டவை ‘மது மற்றும் போதைப் பொருள்கள் இல்லா பகுதி’யாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மது, போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ், கலால்  மற்றும் வனத்துறை அதிகாரிகள் இந்த தடையை அமல்படுத்தும் வகையில், தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்  மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
image
பக்தர்கள் மட்டுமின்றி சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் அதன் அருகே அமைந்துள்ள பகுதிகளுக்கு வரும் யாத்ரீகர்கள்,  வியாபாரிகள் இந்த அறிவிப்பைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கலால் துறை உதவி  ஆணையரின் தலைமையில் கட்டுப்பாடு அறை  அமைக்கப்பட்டு நவம்பா் 14-ஆம் தேதி முதல் கண்காணிப்பு பணிகள் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.