திருமலை: தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம் முனகல அருகே உள்ள சாகர் கால்வாயின் இடது கரையில் ஐயப்பசுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஐயப்பசுவாமிக்கு மகாபடி பூஜை நடந்தது. இந்த பூஜையில் அப்பகுதி பக்தர்கள் மற்றும் முனகல கிராமம் உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து பங்கேற்றனர். இரவு 10 மணியளவில் படி பூஜை முடிந்து முனகல கிராமத்தை சேர்ந்த 38 பக்தர்கள், தாங்கள் வந்த டிராக்டர் டிரெய்லரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர்.
விஜயவாடா- ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ள தங்கள் கிராமத்திற்கு டிரைவர் ராங் ரூட்டில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற லாரி டிராக்டர் மீது மோதியது. இதில், டிராக்டர் சேதமாகி 5 பேர் பலயிாகினர் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.