டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சி முகர்ந்த இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இங்கிலாந்து அணி எப்படி?

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் அரைஇறுதிக்குள் கால் பதித்தது. அரைஇறுதியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எளிதாக விரட்டியடித்தது. அரைஇறுதியில் இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவரில் எட்டிப்பிடித்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் (80 ரன்கள்), அலெக்ஸ் ஹாலெஸ் (84 ரன்கள்) ஆகியோர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 170 ரன்கள் திரட்டி அணியை சிரமமின்றி வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலியும், பந்து வீச்சில் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்தும் வலு சேர்க்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆடாத வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், பேட்ஸ்மேன் டேவிட் மலான் ஆகியோர் உடல் தகுதியை எட்டி இருப்பதால் இறுதிப்போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இடம் பெறும் பட்சத்தில் கிறிஸ் ஜோர்டான், பில் சால்ட் கழற்றிவிடப்படுவார்கள். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் 44 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடப்பார்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 12’ சுற்றில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் அரைஇறுதியை எட்டியது. தென்ஆப்பிரிக்கா தனது கடைசி லீக்கில் நெதர்லாந்திடம் வீழ்ந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது. அரைஇறுதியில் நியூசிலாந்தை 152 ரன்னில் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பலமான பந்து வீச்சு

பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு அந்த அணி எழுச்சி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய பாபர் சதம் அரைஇறுதியில் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு பலமாகும். பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது ஹாரிஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்பும், சுழற்பந்து வீச்சில் ஷதப் கான், முகமது நவாஸ்சும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஷதப் கான் மேலும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் 20 ஓவர் போட்டியில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார்.

பாகிஸ்தானின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாகும். முதலில் பேட்டிங் செய்து அந்த அணியினர் கவுரவமான ஸ்கோரை எடுத்து விட்டால், எதிரணியை கட்டுப்படுத்தும் வித்தையில் பவுலர்கள் கைதேர்ந்தவர்கள். 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களில் பாபர் அசாம் (560 ரன்கள்) இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அந்த அணிக்கு எதிராக அதிகபட்சமாக 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

1992-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன்பிறகு உலக கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகள் சந்தித்தது கிடையாது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டுகிறார்கள். 1992-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இதேமாதிரி நியூசிலாந்தை அரைஇறுதியில் வீழ்த்தி தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இங்கிலாந்தையும் சாய்த்து உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.

மழை மிரட்டல்

அதேபோல் மெல்போர்ன் மைதானத்தில் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்க பாகிஸ்தான் அணியினர் தங்கள் முழுபலத்தையும் வெளிப்படுத்துவார்கள். 2-வது முறையாக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணியினரும் வரிந்து கட்டுவார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என்று கணிப்பது கடினம். இருப்பினும் நெருக்கடியை எந்த அணி நேர்த்தியாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்று சொல்லலாம்.

மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தாலும், முதலில் சில ஓவர்களில் பந்து வீச்சை சரியாக சமாளித்து விட்டால் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடவும் உதவிகரமாக இருக்கும். இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மெல்போர்னில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் (திங்கட்கிழமை) இறுதிப்போட்டி நடைபெறும்.

ரூ.13 கோடி பரிசு

சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் இங்கிலாந்தும், 9-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக வெற்றி பெற்று இருக்கும் பாகிஸ்தான் (10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை) 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இதுவரை இங்கிலாந்தை வென்றதில்லை. 2009, 2010-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் இங்கிலாந்து முறையே 48 ரன்கள், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.13 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.6 ½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

பிற்பகல் 1.30 மணிக்கு…

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான் அல்லது டேவிட் வில்லி, அடில் ரஷித்.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப்கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி.

‘கடும் சவாலை எதிர்பார்க்கிறோம்’- பட்லர்

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் நேற்று அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் ஒரு அற்புதமான அணியாகும். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியதில் அவர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பதாக நான் நினைக்கிறேன். சிறந்த வீரர்களையும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தக்கூடியவர்கள். வேகப்பந்து வீச்சு அவர்கள் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். அந்த ஆட்டங்கள் கடுமையான போட்டி நிறைந்ததாக இருந்தது. எனவே அதுபோல் வரும் ஆட்டத்திலும் அவர்களிடம் இருந்து கடும் சவாலை எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு எதிராக அருமையான உத்வேகத்துடன் சில அற்புதமாக போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். நாளைய (இன்றைய) ஆட்டமும் அதுபோல் சிறந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு அணியாக இணைந்து சுதந்திரமாக முழு திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

‘முழு திறமையையும் வெளிப்படுத்துவோம்’ – பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அளித்த பேட்டியில், ‘மெல்போர்னில் 1992-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது போல் இந்த உலக கோப்பையையும் வெல்லுமா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக இரு போட்டிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. நாங்கள் கோப்பையை வெல்ல எங்களது முழுதிறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்போம். குறிப்பாக மெல்போர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அணிக்கு தலைமை தாங்குவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த போட்டி தொடரை நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை. ஆனால் புலிகள் போல் போராடி வலுவாக மீண்டோம். கடைசி 3 ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செயல் பட்டதால் தற்போது நான் பதற்றத்தை விட அதிக உற்சாகமாக இருக்கிறேன். இறுதிப்போட்டியில் நெருக்கடி இருக்க தான் செய்யும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதனை சமாளிக்க முடியும்’ என்று கூறினார்.

மேலும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம் மற்றும் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சமூக வலைதளத்தில் பதிவிட்டது உங்கள் அணிக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்குமா? என்று கேட்டதற்கு, ‘அதுபோன்ற நெருக்கடி எதுவும் எங்களுக்கு இல்லை. அந்த டிவிட்டை நான் பார்க்கவில்லை. அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று பதிலளித்தார்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.