பாஜகவை பின்னுக்கு தள்ள மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை மீட்டு சிறப்பு மாநாடு கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். பெருமாள் வரவேற்றார். அகில இந்தியப் பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு மாநாட்டு பிரகடன தீர்மானத்தை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது. ‘‘புதுச்சேரியில் மட்டுமல்ல கோவா, கர்நாடகா என பல மாநிலங்களில் இரட்டை என்ஜின் போன்ற பாஜக மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்த ஆட்சி நடக்கிறது. ரயிலின் இருமுனையில் பொருந்திய என்ஜின் எதிரெதிர் திசை நோக்கி இழுப்பது போன்ற நிலையால் முன்னேற்றமில்லாத நிலையில், அந்தந்த மாநிலங்கள் உள்ளன.

ஆகவே, இரட்டை என்ஜின் அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். மத்திய அரசு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும். தற்போது பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர்த்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர். ஆகவேதான் தமிழகம், கேரளத்தில் ஆளுநர்களுக்கு எதிரான நிலையை மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவேண்டிய துணைநிலை ஆளுநர் மத்திய அரசின் தொங்குசதையாகவே அதை தொடர நினைக்கிறார். மக்கள் நிராகரித்தாலும் பாஜக ஆளும் கட்சியாகும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. இப்போக்கால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கல்வியில் இந்துத்துவத்தை பொறுத்தும் வகையில் மத்திய கல்விப் பட்டியலில் அதைச் சேர்த்துள்ளது. கல்வியை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் பாஜக தங்களது மதக் கொள்கையை இளந்தலைமுறை இடம் கொண்டு செல்கிறது.

அதற்காகவே அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் அதிகரிக்கப்படுகின்றன. அறிவியல் அணுகுமுறை கல்வியே இளந்தலைமுறைக்குத் தேவையாகும். பாஜக அரசானது மாற்றுக்கருத்தை ஏற்காமலும், சிறுபான்மை மதம் மீது தாக்குதலும், மாநில மொழிகளை அழிக்கும் வகையிலும் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.

அரசியல் சட்டமானது நாட்டை காக்கும். அச்சட்டமானது மதச்சார்பின்மை, சமூகநீதி, பொருளாதார சுதந்திரம், கூட்டாட்சி தத்துவம் ஆகிய 4 தூண்களால் தாங்கப்படுகிறது. அவற்றை மாற்றும் நோக்கில் பாஜக அரசு செயல்படுகிறது.

கோயில் கட்டும் பூஜைகள் போன்றவற்றில் பிரதமரே பங்கேற்பதும், சட்டங்கள் மூலம் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுப்பதும் சரியல்ல. பெருமுதலாளிகள், மதச்சார்பின்மை கூட்டணியால் நாட்டின் வளம் சுரண்டப்படுகிறது.

ஆகவே, பாஜகவை பின்னுக்கு தள்ள மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரியை தென்னிந்திய சோதனைக்களமாக்குவதை முறியடிக்க மக்கள் போராட முன்வரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது,‘‘கிரண்பேடி இங்கு ஆளுநராக இருந்தபோது 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து பாஜாவை புதுச்சேரியில் காலூன்ற செய்து பணியை தொடங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு எதிராக, போட்டி அரசாங்கத்தை அவர் இங்கே நடத்தினார்.

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு தனது விசுவாசத்தை நிரூபித்து காட்டினால் குடியரசுத் துணைத் தலைவர், அமைச்சர், எம்பி ஆகலாம் என்ற நினைப்புடன் தான் கிரண்பேடி செயல்பட்டார். ஆனால் அவரை மோடி, அமித்ஷா தூக்கி எறிந்து விட்டனர். இதே நிலைதான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் ஆகியோருக்கு ஏற்படும்.

68 ஆண்டுகால வரலாற்றில் காணாத மோசமான அளவில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. எப்படி குஜராத்தை பரிசோதனை கூடமாக பாஜக ஆட்சி நடத்தியதோ, அதுபோன்று தான் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக புதுச்சேரியை பரிசோதனை கூடமாக மத்திய அரசு நடத்துகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் ரேஷன் கடைகளை திறப்போம், அரிசி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடைகளை திறப்பது மட்டுமல்ல நடமாடும் ரேஷன் கடைகளை உருவாக்குவோம் என்றார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் பேசும்போது ரேஷன் கடைகள் அனைத்தையும் சூப்பர் மாடலில் மாற்றப் போகிறோம் என்று சொன்னார். அதனை செய்தாரா? இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் மூடப்பட்டு, அரிசி வழங்குவதை நிறுத்திய ஒரே மாநிலம் புதுச்சேரி தான்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது ரேஷன் கடைகள் மூடப்பட்டு, அரிசி கொடுக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ரேஷன் கடைகளை மூடி, அரிசிக்கு பதில் பணம் பட்டுவாடா செய்வது அமலானால் புதுச்சேரியை போன்று இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இதனை அமலாக்கலாம் என்று பரிசோதனை கூடமாக நடத்தி புதுச்சேரி மக்களை வஞ்சிக்கிறார்கள். ரேஷன் கடைகளை திறக்க முடியாவிட்டால் முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மின்துறை தனியார்மயம், ரேஷன் கடைகளை மூடுவது, கல்வியை தனியார் மயமாக்குவது என ஒட்டுமொத்தமாக மத்திய, மாநில அரசுகள் மக்களை வஞ்சிப்பதை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி உறவு வைத்துக் கொண்ட எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாத நிலையை ஏற்படுத்துவதுதான் பாஜகவின் தந்திரம். இதனை இங்குள்ள முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.