முதல்வருடன் சந்திப்பு… நளினி விருப்பம்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு தற்போது விடுதலை பெற்றுள்ள நளினி, அவரது வழக்கறிஞருடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அவர் கூறியது:

மத்திய, மாநில அரசுகளுக்கும் மற்றும் தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கும் நன்றி. சிறையில் இருந்தாலும் என் குடும்பத்தினரின் நினைவில்தான் வாழ்ந்தேன். இந்த வழக்கில் கைதான அன்றிலிருந்து வெளியில் வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

விரைவில் சிறையிலிருந்து வெளியே செல்வோம் என்று எண்ணிய நேரத்தில் தூக்கு தண்டனை என்ற தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டுமென பலமுறை நினைத்ததுண்டு. முதல்வர் சந்திக்க நினைத்தால் நிச்சயம் அவரை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவிப்போம்.

பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்தபோது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம்விட்டு பேசி கண் கலங்கினார். சம்பவ இடத்திற்கு சென்றதாக மட்டுமே என் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன். ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன்.

மருத்துவர்கள் பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பின்பே சிறையின் கதவை திறந்தனர். அதுவரையில் கைது செய்யப்பட்ட நாள் அன்றிலிருந்தே 24 மணி நேரமும் சிறையின் கதவை திறக்கவில்லை. ராஜிவ் காந்தியின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். குண்டுவெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்தில் நான் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்று தந்தது. சிறையிலிருந்து வெளிவர மேலும் சிறிது காலம் ஆகும் என்று நினைத்த நேரத்தில் வெளியே வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கணவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடனே 6 ஆண்டு உயர்கல்வி படித்து முடித்தேன். அங்கு இருந்தபோது தையல்,ஓவியம்,saree design,கைவினை பொருட்கள் செய்வது,போன்ற பல சுய தொழில்களை கற்று கொண்டுள்ளேன்.

ஒரு மாத காலம் சிறை விடுப்பு ( பரோல் ) வழங்கிய முதல்வருக்கு நன்றி. மேலும் அகதிகள் முகாமில் இருந்து கணவரை மீட்டெடுக்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். இதற்கும் அனைவரும் உதவி செய்ய வேண்டும். எங்களை சந்திக்க மகள் ஆர்வமாக உள்ளார். விசா கிடைத்தால் அவளை நேரில் சந்திப்பேன் என்று நளினி உருக்கமாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.