`என் தந்தைக்காக, 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க போகிறேன்’- தலைநகரை கதிகலங்கவைத்த பெண்

டெல்லியை சேர்ந்த பெண்ணொருவர், இறந்து போன தனது தந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வருவதாக கூறி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, இரண்டு மாத குழந்தையொன்று டெல்லியின் கார்கி பகுதியில் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அளித்த தகவலின்படி, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். குழந்தையின் தாய் அளித்த தகவலின்படி, குழந்தையை கடத்திச்சென்ற ஸ்வேதா (25) என்ற பெண், தன்னை ஒரு தன்னார்வலராக அறிமுகப்படுத்திக்கொண்டதாக தெரிகிறது. ஸ்வேதா, தன்னுடைய குழந்தைக்கு இலவசமாக மருந்துகளும், மருத்துவ ஆலோசனையும் தருவதாக கூறியதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
image
முதல்நாள் தன்னை தன்னார்வலர் என அறிமுகப்படுத்திய ஸ்வேதா (25) என்ற அப்பெண், பின் அவர்களை பின்தொடர்ந்திருக்கிறார். அடிக்கடி குழந்தையின் உடல்நலனையும் பரிசோதித்துள்ளார். பின் ஒருநாளில், குழந்தையை தன்னுடன் வெளியே அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். குழந்தையின் தாய், தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரை துணைக்கு அனுப்பி, குழந்தையை ஸ்வேதாவிடம் கொடுத்துள்ளார். உறவுக்கார பெண்ணும், ஸ்வேதாவும் குழந்தையுடன் சேர்ந்து வெளியே சென்ற நிலையில், அங்கிருந்து ஸ்வேதா அந்த உறவுக்கார பெண்ணுக்கு ஜூஸில் மயக்கமருந்து கொடுத்து குடிக்கவைத்துள்ளார்.
அதை குடித்து அப்பெண் மயங்கியவுடன், குழந்தையை கடத்தியுள்ளார். இக்காட்சிகள் யாவும் சிசிடிவி-யில் இருந்த நிலையில், அதன்மூலமாகவே டெல்லி போலீஸார் குழந்தையை மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக குழந்தை மீட்கப்பட்டதால், அப்பெண்னின் நரபலி திட்டம் தோல்வியடைந்திருக்கிறது. 
image
குழந்தையை கடத்திய பெண்ணின் பெயர் ஸ்வேதா (25) என்றும், அவருக்கு மூடநம்பிக்கைகள் நிறைய இருந்ததாகவும், பிறந்து சில தினங்களேயாகும் பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்துபோன தனது தந்தை மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்ததாகவும் ஊடகங்களுக்கு டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஸ்வேதா மீது 2 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில்தான் கேரளாவின் பத்தினம்பட்டா பகுதியில் மாந்திரீகம் என்ற பெயரில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு பின் அவர்களின் உடல் வெட்டி சமைத்து சாப்பிடப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருந்தது. அது அடங்குவதற்குள், பச்சிளம் குழந்தையை இளம்பெண்ணொருவர் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.