தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு!

தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில், பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இன்று தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பகுதி செயலாளர் நீலகண்டன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்தி ஆகியோரிடம் தஞ்சை பாராளுமன்ற  உறுப்பினர் S.S.பழநிமாணிக்கம்  ஆலோசனை மேற்கொண்டார்.  தஞ்சாவூர் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், திலகர் திடல் பகுதி, பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. 

அப்பொழுது கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா விடம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் நிலப்பரிவர்த்தனை தொடர்பாக பணி முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  .எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ‘தஞ்சாவூரில் இரண்டாம் உலகப்போரின் போது விமான போக்குவரத்து தளம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து முன்பு பயணிகள் விமானப் போக்குவரத்து வசதிகள் நடைபெற்றது. காலப்போக்கில் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தஞ்சாவூரில் விமானப்படை உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே விமான போக்குவரத்துக்கு சொந்தமாக 38 ஏக்கர் நிலம் அங்குள்ளது. அதன்பிறகு விமானப்படைக்கு கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டது’ என்றார். 

தற்போது தஞ்சாவூருக்கு உலகளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதாலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமானோர் சென்று, வருவதால் தஞ்சாவூரில் விமான போக்குவரத்து வசதி அவசியமாகிறது என்றும்,  விமானப் போக்குவரத்து துறைக்கு உள்ள 38 ஏக்கர் நிலம், விமானப்படைத் தளத்தின் உள்பகுதியில் உள்ளது. எனவே உள்பகுதியில் உள்ள அந்த நிலத்தை விமானப்படைக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலான புதுக்கோட்டை சாலையோரம் உள்ள இடத்தை விமானப் போக்குவரத்துக்கு வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். 

இந்த நிலத்தை வருவாய்த்துறையின் சார்பில் பரிவர்த்தனை செய்து தர கோரப்பட்டுள்ளது. புதுடெல்லில் ஓரிரு நாட்களில் விமான போக்குவரத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக  விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் நான் பங்கேற்கவுள்ளேன்.

தஞ்சாவூரில் விமானப்படை தளத்தில் உள்ள நிலப்பரிவர்த்தனை தொடர்பான நடைமுறைகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். இதையடுத்து விரைவில்  தஞ்சாவூரில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும் என்றார். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் அரேபியா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றுவதால் , தஞ்சை பயணிகள் விமான போக்குவரத்து மூலம் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.