நடப்பாண்டு, தமிழக பொறியியல் கல்லூரிகளில் 60ஆயிரம் இடங்கள் காலி….

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவிகிதம் மாணவர் சேர்க்கை உயர்ந்து உள்ளது என்றாலும்,  சுமார் 60ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு (2022-23) கல்வி ஆண்டில் 2 லட்சத்து 7,996 இடங்களில் சேர்க்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதில் இருந்த 1 லட்சத்து 54,278 அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டது.  பொறியியல் கல்லூாிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் 1,48,811 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 65சதவீதம் அரசு இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10,965 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை சோ்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்களான 175 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ல் தொடங்கி நவம்பர் 10-ம் தேதியுடன் முடிந்தது. பொதுப்பிரிவு கலந்தாய்வு மட்டும் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது.  மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 2,431 மாணவர்களில் 610 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 377 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் சுற்றில் 10,017 மாணவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 9,340 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். 2-வது சுற்றில் 18,520 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டதில் 17,650 பேரும், 3-வது சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட 24,727 பேரில் 23,450 பேரும், 4-வது சுற்றில் 30,938 பேருக்கு இடங்கள் வழங்கப்பட்டதில் 26,409 பேரும் கல்லூரியில் சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 8,759 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அதில் 7,797 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அதன்படி, மொத்தம் உள்ள 1 லட்சத்து 54,278 இடங்களில் 93,571 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 69,255 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் (89,187) வரை உயர்ந்துள்ளது.

இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் நவம்பர் 10-ம் தேதிக்குள் சென்று மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த இடங்கள் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் என மொத்தம் சேர்த்து 69,255 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் (89,187) வரை உயர்ந்துள்ளது உய உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் துணைகலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.