மதுரை அருகே துப்பாக்கிச்சூடு ; அம்மன் கோயில் கிடாய் விருந்தில் பயங்கரம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனசேகரன் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோயிலில் கிடாய் விருந்து வைத்துள்ளார். தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அது தொடர்பான நண்பர்களை கிடாய் விருந்துக்கு அழைத்துள்ளார்.

இந்த விருந்திற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் அதிபர் வேதகிரி, திருமங்கலம் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விருந்திற்கு வந்தவர்கள் கோயிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடி ஒன்றில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். 

மது போதை அதிகமாகவே அங்கிருந்த கணபதி, வேதகிரி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி, ‘நீ பெரிய ஆளா… நான் பெரிய ஆளா… என இப்போது காண்பிக்கிறேன் பார்’ எனக் கூறி தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதில் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடி விட்டனர். 

இந்நிலையில் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை கண்ட வேதகிரி தனது காரில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தியதில், கிடாய் விருந்து வைத்த தனசேகரன், தப்பி ஓடிய வேதகிரி அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதி ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கும் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வானத்தை நோக்கி சுட்ட வேதகிரி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவத்தை அடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் செளந்தர்யா மற்றும் வட்டாட்சியர் சிவராமன் உள்ளிட்டோர் பத்ரகாளியம்மன் கோவில் வளாகம் அருகே விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

கிடாய் விருந்து பங்கேற்ற நண்பர்கள் மது அருந்தி மது போதை தலைக்கு ஏறியதால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு யார் பெரியவர் என்பதற்காக கை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.