T20 World Cup: `ஆல் இன் ஆல்' இங்கிலாந்தும்; பாகிஸ்தான் கோட்டைவிட்ட தருணங்களும்!

வெற்றிக் கொண்டாட்டத்தில் சிகப்புச் சிறகுகளை விரித்தபடி குதூகலமாக இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தை சுற்றி வர, ரன்னர் அப் மெடலை மட்டுமே பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் அணி தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கிறது. இறுதிப்போட்டிக்கு பிறகு மெல்பர்ன் மைதானத்தில் காணக்கிடைத்த காட்சி இது. இந்தப் போட்டியில் சில தருணங்கள் சில நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் அல்லது வேறு மாதிரியாக நிகழ்ந்திருந்தால் ஆட்டத்தின் போக்கே கூட மாறியிருக்கலாம். முடிவில் இங்கிலாந்து நிற்கும் இடத்தில் பாகிஸ்தானும் பாகிஸ்தான் நிற்கும் இடத்தில் இங்கிலாந்துமே கூட நின்றிருக்கக்கூடும். அப்படியாக, போட்டியை மாற்றிய வெற்றித் தோல்வியை தீர்மானித்த சில தருணங்கள் பற்றி இங்கே..

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்படியிருந்தும் அந்த அணி இங்கிலாந்தை சுலபமாக சேஸ் செய்யவிடவில்லை. 19 வது ஓவர் வரை போட்டியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு 10-20 ரன்களைக் கூடுதலாக அடித்திருந்தால் கடைசி பந்து வரைக்குமே போட்டி சென்றிருக்கக்கூடும். இந்த இடத்தில்தான் அடில் ரஷீத் வீசிய ஒரு ஓவர் அதிக கவனத்தை ஈர்க்கிறது. அடில் ரஷீத் வீசிய அந்த 12 வது ஓவரில் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஒரு ரன்னைக் கூட கொடுத்திருக்கமாட்டார். விக்கெட் மெய்டனாக்கியிருந்தார். பாகிஸ்தான் ரொம்ப சுமாரான ஒரு ஸ்கோரை எடுத்ததற்கு இந்த ஓவர் ஒரு முக்கியக் காரணம் என கூறலாம். ஏனெனில், முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 68 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. பாபர் அசாம் செட்டில் ஆகி க்ரீஸூக்குள் நின்றார். கூடவே ஷான் மசூத்தும் இருந்தார். 10 ஓவர்கள் முடிந்தவுடன் டிரிங்ஸ் ப்ரேக் விடப்படுகிறது. இந்த ப்ரேக்கிலேயே பாகிஸ்தான் போட்டியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டது. ப்ரேக் முடிந்து 11 வது ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள். ஷான் மசூத் சிக்சரும் பவுண்டரியும் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில்தான் அடுத்த 12 வது ஓவரையே அடில் ரஷீத் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பாபர் அசாம் அடில் ரஷீத்திடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பாபர் அசாம் இந்த ஆண்டு முழுவதுமே ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறத்தான் செய்திருக்கிறார்.

டி20 போட்டிகளில் லெக் ஸ்பின்னர்கள் மற்றும் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக 9 முறை அவுட் ஆகியிருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் 115 க்குள்தான் இருக்கிறது. அடில் ரஷீத் ஒரு தரமான கூக்ளியை வீசவே அதை அட்டாக்கும் செய்ய முடியாமல் முறையாக டிஃபன்ஸ் ஆடவும் முடியாமல் பாபர் அசாம் அவுட் ஆகியிருந்தார்.

அடில் ரஷீத்

அடில் ரஷீத் வீசிய இந்த ஓவர் விக்கெட் மெய்டன். இந்த ஓவருக்கு முந்தைய மூன்று ஓவர்களில் அதாவது 9, 10, 11 ஆகிய ஓவர்களில் பாகிஸ்தான் அணி 34 ரன்களை சேர்த்திருந்தது. அதேநேரத்தில், அடில் ரஷீத் இந்த ஓவரை வீசிய பிறகான மூன்று ஓவர்களில் அதாவது 13, 14, 15 இந்த 3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இஃப்திகாரின் விக்கெட்டையும் இழந்திருந்தது. ட்ரிங்ஸ் ப்ரேக்கிற்கு பிறகு அட்டாக்கிங்காக ஆடலாம் என்று என்று நினைத்திருந்த பாகிஸ்தானின் எண்ணத்தை அடில் ரஷீத் காலி செய்தார். ரஷீத் வீசிய அந்த 12 வது ஓவர் கொடுத்த ஷாக்கிலிருந்து பாகிஸ்தானால் மீண்டு வரவே முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் கூட பாகிஸ்தான் 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தானின் வீழ்ச்சியை தொடங்கி வைத்த அந்த 12 வது ஓவரில் மட்டும் பாபர் அசாம் ஜாக்கிரைதையாக இருந்து அடில் ரஷீத்தை கடந்திருந்தார் எனில் பாகிஸ்தான் பெரும் வீழ்ச்சியை தவிர்த்திருக்கக்கூடும்.

சாம் கரனின் 4 ஓவர்களையுமே கூட குறிப்பிட்டாக வேண்டும். 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கிடைத்திருந்தது. சாம் கரன் எடுத்த மிக முக்கியமான விக்கெட் ரிஸ்வானுடையது. பவர்ப்ளேயிலேயே கொஞ்சம் உட்பக்கமாக திரும்பிய பந்தொன்றில் ரிஸ்வான் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாகியிருந்தார்.

Sam Curran

இந்த போட்டிக்கு முன்பாக இந்தத் தொடரில் சாம் கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகள் 16-20 ஓவர்களான டெத் ஓவர்களில் வந்திருந்தது. 1 விக்கெட் மிடில் ஓவர்களில் வந்திருந்தது. எஞ்சிய ஒரே ஒரு விக்கெட் மட்டுமே பவர்ப்ளேயில் வந்திருக்கிறது.

இந்த ரெக்கார்டுகளின் படி பார்த்தால் சாம் கரன் பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க 100 க்கு 10% வாய்ப்புகளே இருக்கிறது. அந்த 10 சதவிகித சாத்தியத்திற்குள் இந்த இறுதிப்போட்டி அடங்கியதும் பாகிஸ்தான் தோற்றுப்போக மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரிஸ்வான் பாபர் அசாம் கூட்டணி நிலைத்திருந்தால் இந்த போட்டியே வேறு மாதிரியாக மாறியிருக்கும்.

பந்துவீச்சில் இவையெல்லாம் போட்டியை மாற்றிய தருணமெனில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டமே போட்டியை மாற்றியது. ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். வெறும் எண்ணாக பார்த்தால் டி20 க்கான தடமே தெரியாத இன்னிங்ஸ். ஆனால், இந்த இன்னிங்ஸ்தான் இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறது. ஸ்டோக்ஸ் ஆடிய அந்த 49 பந்துகளில் 21 பந்துகள் டாட் ஆக்கியிருந்தார். இந்த 21 டாட்களில் பெரும்பாலான பந்துகளில் பீட்டன் ஆகியிருந்தார். நசீம் ஷாவும் ஹரீஸ் ராஃபும் டெஸ்ட் போட்டியை போல குட் லெந்தில் வீசி ஆதிக்கம் செலுத்தினர். பௌலர்கள் செலுத்திய ஆதிக்கத்தை ஸ்டோக்ஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தார். உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டுமென அவசரகதியில் எதையுமே செய்யவில்லை. காத்திருந்தார், சரியான நேரத்தையும் சமயத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தார். எதிர்பார்த்த நேரம் வந்தது.

16 வது ஓவரின் முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு ஷாகீன் ஷா அஃப்ரிடி காயம் காரணமாக வெளியேறுகிறார். மீதமிருக்கும் 5 பந்துகளையும் ஆல்ரவுண்டரான இஃப்திகார் வீசினார். இதுதான் சமயமென பதுங்கியிருந்த ஸ்டோக்ஸ் பாய்ந்தார்.

Stokes

இந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட் அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்தார். அடுத்த ஓவரிலேயே மொயீன் அலியும் அட்டாக்கைத் தொடங்க 19 வது ஓவரிலேயே இங்கிலாந்து போட்டியை முடித்தது. ஒருவேளை ஷாகீன் ஷாவுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால்? ஷாகீன் ஷா அந்த 16 வது ஓவரை முழுமையாக வீசியிருந்தால்? என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால், கடைசிப் பந்து வரை போட்டி சென்றிருக்கும் என்பது மட்டும் உறுதி!

இவைதான் போட்டியை மாற்றிய தருணங்கள். இவை நிகழாமல் போயிருந்தால் அல்லது வேறு மாதிரியாக நிகழ்ந்திருந்தால் முடிவும் மாறியிருக்கக்கூடும். ஆனால், இந்த அனுமானிப்புக்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை.

England

வெற்றிக்கான அத்தனை தருணங்களையும் ஆட்கொண்டு இங்கிலாந்து தரமான சம்பவத்தை செய்துவிட்டது. வாழ்த்துகள் இங்கிலாந்து!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.