கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை; 20 ஆண்டுகளுக்கு பின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், 20 ஆண்டுகளுக்கு பின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், 5 லட்சத்து 14 ஆயிரத்து 326 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட மாவட்டமாகும். இதில் வனப்பகுதிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 409 ஹெக்டேரும், தரிசு நிலங்கள் 6 ஆயிரத்து 341 ஹெக்டேரும், சாகுபடி பரப்பு 1 லட்சத்து 97 ஆயிரத்து 564 ஹெக்டேரும் உள்ளது.

இங்கு காவிரி, தென்பெண்ணயாறு பாய்கிறது. காவிரியாறு அஞ்செட்டி தாலுகா வழியாக தென்மேற்கு பகுதி வழியாக சென்று ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் கலக்கிறது. கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த காலங்களில் ஆற்றுப்படுகை பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது. ஆற்றுப்படுகை பகுதியில் நெல் 20 ஆயிரத்து 687 ஹெக்டேரிலும், ராகி 48 ஆயிரத்து 944 ஹெக்டேரிலும், இதர சிறு தானிங்கள் 11 ஆயிரத்து 937 ஹெக்டேரும், பயறு வகைகள் 48 ஆயிரத்து 749 ஹெக்டேரும், கரும்பு 4 ஆயிரத்து 78 ஹெக்டேரும், மா 30 ஆயிரத்து 17 ஹெக்டேரும், தென்னை 13 ஆயிரத்து 62 ஹெக்டேரும், இதர பயிர்கள் 43 ஆயிரத்து 199 ஹெக்டேரும் பயிரிடப்பட்டு வந்தது.

ஆற்றுப்படுகை பகுதியில் நெல், கரும்பு பயிரிடப்பட்டது. ஆற்றுப்பகுதி மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, படேதலாவ் ஏரி, பாரூர் பெரிய ஏரி ஆகிய பகுதிகளில் இரண்டு போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஆற்றுப்படுகை பகுதியில் நெல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆற்றுப்படுகை பகுதியை நம்பி, கிணற்று பாசனம் மூலம் மலர் செடிகள், மா, தென்னை, வெற்றிலை பயிரிடப்பட்டு வந்தது. சீரான மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கிருஷ்ணகிரி பகுதியில் 600 அடிக்கு கீழும், பர்கூர், ஜெகதேவி, மத்தூர் பகுதிகளில் சுமார் ஆயிரம் அடிக்கு கீழும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.

இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் நிலங்களை விற்றும், பலர் வேறு வேலை தேடியும் அண்டைய மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. கால்நடை வளர்ப்பும் மிகவும் குறைந்து போனது. கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது தென்னை, மா போன்ற மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என, பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு அமைத்து, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினர். நாளடைவில், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வறண்டதால், தண்ணீரை விலைக்கு வாங்கி டிராக்டர் மூலம் எடுத்து வந்து, தென்னை மரங்களை காப்பாற்ற கடும் அவதிப்பட்டனர். அப்போதும் பெரும்பாலான தென்னை மரங்கள் காய்ந்து போனது.

 இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பரவலாக பெய்த மழை மற்றும் ஒருவாரமாக கொட்டி தீர்த்த மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வர துவங்கியது. குறிப்பாக பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரிகளுக்கும் தண்ணீர் வந்தது. பெரும்பாலான ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளது. தொடர் மழையின் காரணமாக, 20 ஆண்டுகளுக்கு பின்னர், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மிகவும் வறட்சி நிலவிய வேப்பனஹள்ளி, பர்கூர், மத்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளிலும், தற்போதைய மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரி நிரம்பியது, பர்கூர் தொகுதி மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

படேதலாவ் ஏரி கால்வாய் அமைத்த பின், முதன்முறையாக இந்த கால்வாய் மூலம், பர்கூர் தொகுதிக்குட்பட்ட 11 பஞ்சாயத்து ஏரிகளுக்கு தண்ணீர் சென்றுள்ளது. இதனால் அந்த தொகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை தீர்ந்துள்ளது. ஏரிகள், குளங்கள், கிணறுகளில் தண்ணீர் போதிய அளவு உள்ளதால், விவசாயத்தை விட்டு, அண்டயை மாநிலங்களுக்கு சென்றவர்கள், மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி வந்து விவசாயம் செய்து வருகின்றனர். தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளிலும் நீர்நிரம்பி காணப்படுகிறது. மழையால் இரண்டாம் போகமும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.