மருத்துவர்கள் கவனக் குறைவு – கால்பந்து வீராங்கனை மரணம்: சுகாதாரத் துறைக்கு சிக்கல்!

கால்பந்து வீராங்கனை பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்காக, மிகவும் வருந்துகிறோம். இதற்காக அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.