ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

சென்னை: 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின்  காலில் தசைநார் கிழிந்தததை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வலி குறையாததால், கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைநார்கள் அழுகிய நிலையில் இருப்பதால், காலை அகற்ற வேண்டும் எனக்கூறி, அவரின் வலது கால் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH) சிகிச்சை பெற்று வந்த மாணவியின் பல உடல் உறுப்பு செயலிழந்ததால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரணம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, மாணவியின் மரணத்துக்கு காரணம் மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் கவனக்குறைவு தான் எனக்கூறப்பட்டது. இதனையடுத்து மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரசு தரப்பில் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மரணம் அடைந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் போதுமானதல்ல, அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அரசியல் தலைவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமியின் கண்டனமும் கோரிக்கையும்:

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும்: அண்ணாமலை

அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

ரூ.10 லட்சம் போதுமானதல்ல. ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட  கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.