வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா

மோகாதிஷு: 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வரலாற்றில் பண்டைய எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்றுமதி செய்து செல்வ வளமிக்க நாடாகவே சோமாலியா இருந்திருக்கிறது. ரோமானியா அரசுகளுக்கு முந்தைய வரலாற்றை சோமாலியா கொண்டிருந்தது என்றாலும், காலப்போக்கில் போர்கள், நோய்கள், வறட்சி காரணமாக சோமாலியா தனது வளத்தை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், சோமாலியாவின் தற்போதைய நிலை என்பது அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான வறட்சியாகவே பார்க்கப்படுகிறது. சோமாலியாவில் சுமார் 70 லட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளின் உதவியை சோமாலியா கோரியுள்ளது.

சோமாலியாவின் வறட்சிக்கு காரணம் என்ன? – ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, கடந்த நான்கு வருடங்களாக பருவமழை பெய்யாமல் தவறியது வறட்சிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

வறட்சியினால் சோமாலியாவில் பயிர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. சோமாலியாவின் முக்கிய மேய்ச்சல் விலங்குகளான ஒட்டகம், ஆடு மற்றும் மாடுகள் சாப்பிடுவதற்கு போதிய தாவரங்களும் தண்ணீரும் இல்லாமல் போகின. இதன் பொருட்டே லட்சக்கணக்கான கால்நடைகள் பலியாகின.

காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. இதனாலேயே வறட்சியினால் சோமாலியா மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சோமாலியாவின் நிலப்பரப்பு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மையப் பகுதிகள் கிளர்ச்சியாளர்களால் தன்னிச்சையாக செயல்படுகின்றன. இதனால் நிவாரண உதவிகளை சோமாலியாவின் அனைத்துப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாத சூழலில் சோமாலியா அரசு உள்ளது என்பது அந்நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கின்றது. சோமாலியா எதிர் கொண்டுள்ள இந்த சூழல் விரைவில் மாற வேண்டும் என்று ஐ. நா.வின் சர்வதேச மனித உரிமை அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.