தமிழ்நாட்டு மாணவர் பீம்ராஜை காப்பாற்றுக: முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!

டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (South Asian University – SAU) படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் எம்.பீம்ராஜ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அக்டோபர் 13 முதல் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்தை எதிர்த்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதுகலை உதவித்தொகையை 7000 ரூபாயாக உயர்த்துதல், JRF-க்கு இணையாக PhD உதவித்தொகையை உயர்த்துதல், கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட PhD மாணவர்களுக்கான நீட்டிப்புக் கொள்கையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 13 ஆம் தேதி மாணவர்கள் தமது கோரிக்கைகள் கொண்ட மனுவை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளித்தனர், அதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இடையே ஒரு சந்திப்பு நடந்தது. அதில், மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன்பிறகு, மாணவர்களின் கோரிக்கைகள் மீது பதிலளிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு வார கால அவகாசம் கேட்டது. 2017ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக நிர்வாக சபை கூட்டப்படாததால் கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்ற இயலவில்லை எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கைவிரித்துவிட்டது. அதன்பின்னர் மாணவர்கள் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பீம்ராஜ் என்ற மாணவர் உட்பட ஐந்து மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்தது. இதனை எதிர்த்து, மாணவர்கள் நவம்பர் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதன் பின்னர், மாணவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழ்நாட்டு மாணவர் பீம்ராஜ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் பீம்ராஜ் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.