11 மாதத்தில் 3 பேரை இழந்த மகேஷ் பாபு..!

அண்ணன், அம்மா, அப்பா என மூன்று பேரை அடுத்தடுத்து இழந்து சோகத்தில் தவிக்கும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். வயது மூப்பால் ஏற்பட்ட பல்வேறு உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.15-ம் தேதி) காலை அவர் உயிரிழந்தார். கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ரமேஷ்பாபு (56) உடல்நல பிரச்னையால் காலமானார். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி, மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) வயது மூப்பு காரணமாக காலமானார். இன்று (நவ.15-ம் தேதி) மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா(79) காலமானார்.

நடிகர் மகேஷ்பாபு வீட்டில் ஒரே ஆண்டில் மூன்று சோக நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் மிகுந்த சோகத்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அத்துடன், StaystrongAnna என்ற ஹேஷ்டேக்கில் மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்து டிரெண்ட் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.