எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு… புதிய சாதனை!

எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை, சென்ற அக்டோபர் மாதத்தில் ரூ. 13,040.64 கோடியாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில் ரூ. 12,976 கோடி ரூபாயாக இருந்த எஸ்ஐபி மூலம் திரட்டப்படும் முதலீடு முதல் முறையாக ரூ. 13,000 கோடியை கடந்துள்ளது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI) தெரிவித்துள்ளது.

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா (AMFI)

ஈக்விட்டி ஃபண்ட்கள்..!

பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்களில்  முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

நடப்பு நிதி ஆண்டில் 7 மாதங்களில் மொத்தமாக 87 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எஸ் ஐ பி மூலம் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது நாட்டில் 43 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தமது பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி திரட்டுகின்றன. கடந்த ஆண்டு புதிதாக புதிய ஃபண்ட் வெளியீடு (என் எஃப் ஓ) மூலம் நிதி திரட்டுவதற்கு செபி தடை விதித்திருந்தது.

இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் பல்வேறு புதிய திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இதுவும் மக்களை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் ரூ. 2,686 கோடி என்ற அளவிற்கு செக்டோரல் திட்டங்களிலும், ரூ. 1,385 கோடி அளவிற்கு மிட் கேப்   நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களிலும், ரூ.1,592 கோடி அளவிற்கு ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்

முதலீட்டாளர்கள்களின் எண்ணிக்கை..!

மேலும் நாள்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சேரும் முதலீட்டாளர்கள்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில் புதிதாக 9.52 லட்சம் வாடிக்கையாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தமது முதலீட்டை தொடங்கி இருக்கின்றனர். இதன்மூலம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.93 கோடியாக உயர்ந்துள்ளது. என்றாலும் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்  இந்தியர்களின் சதவீதம்  குறைவாகவே உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பங்குச் சந்தைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதலீடு செய்துள்ளனர். நமது நாட்டில் அது 4% என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்ற நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டிலிருந்து தமது முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் சிறுமுதலீட்டாளர்கள் செய்துள்ள முதலீடு சந்தை சரிவை பெருமளவு குறைத்துள்ளது. சிறுமுதலீட்டாளர்களின் வருகை நமது பங்கு சந்தையை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளது.

 கடந்த 20 ஆண்டுகளில் நீண்ட கால நோக்கில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு வங்கி டெபாசிட்டுகள் போன்ற பாரம்பரிய வகை திட்டங்களில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக கொடுத்துள்ளது. அதுவும் மக்களை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்

ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைக்க கூடாது என்பது முதலீட்டு மந்திரம் ஆகும். பல்வேறு வகை திட்டங்களையும் ஒரே குடைக்குள் வழங்குவது மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் சிறப்பாக அமைந்துள்ளது. குறைந்த ரிஸ்க் உடைய டெப்ட் வகை திட்டங்கள், குறுகிய கால முதலீட்டிற்கு லிக்விட் ஃபண்ட் திட்டங்கள், தங்கம் மற்றும் வெள்ளிகளில் முதலீடு செய்ய பிரத்யோகத் திட்டங்கள், இவை அனைத்திலும் கலந்து முதலீடு செய்யும் பேலன்ஸ்ட் வகை திட்டங்கள், கூடுதல் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு தோதான பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள் என்று பல்வேறு வகை முதலீட்டு திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் சிறப்பாக அமைந்துள்ளது.

அதனால் முதலீட்டாளர்கள் தமக்கு ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து தமது முதலீட்டின் ஒரு பகுதியை  எஸ் ஐ பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மேற்கொள்வது நீண்ட கால நோக்கில் பயனுள்ளதாக அமையும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.