சேலம்: சேலம் மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி மூலம் மட்டும் மொத்தம் ரூ.145 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரம் நிலுவை உள்ளதை, விரைந்து வசூலிக்க ‘பில் கலெக்டர்களுக்கு’ இலக்கு நிர்ணயித்து, மேயர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாநகராட்சியில் 2.04 லட்சம் கட்டிடங்கள்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் 2.04 லட்சம் வீடு, கடை, வணிக நிறுவனம், அரசு துறை அலுவலகங்கள், கோயில், மசூதி, சர்ச், காலி இடங்கள் உள்ளது. மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி ஆணையர் வரையிலான பணியிடங்களில் 800க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், 1,500க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர பென்ஷன், பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செலவினங்கள், வரி வருவாயை கொண்டே நிர்வாகம் நடத்தப்படுகிறது. வரி வசூலில் தொய்வு நிலை காரணமாக பணியாளர்களுக்கு ஓரிரு மாதங்கள் சம்பள நிலுவை வைத்தே பட்டுவாடா செய்யப்படுகிறது.
தொழில், சொத்து வரி ரூ.145 கோடி நிலுவை: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி, காலிமனை வரி மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் இருந்து மட்டும் சொத்து வரி ரூ.86.04 கோடியும், அரசு சார்ந்த அலுவலகங்கள், ஆலயங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டன ரூ.26.36 கோடி என மொத்தம் 112.40 கோடி வரி வசூலிக்காமல் நிலுவையில் உள்ளது. அதேபோல, தொழில் வரி தனி நபர் ரூ.12 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரம், அரசு சார்ந்த நிறுவனங்கள் ரூ. 8 கோடியே 42 லட்சத்து 48 ஆயிரம், கடை, வணிக நிறுவனங்கள் ரூ.1 கோடியே 75 லட்சத்து 23 ஆயிரம், குடியிருப்புவாசிகள் ரூ.9 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரம் என மொத்தம் தொழில் வரி ரூ.32 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரம் நிலுவையில் உள்ளது. மாநகராட்சியில் சொத்து, தொழில் வரி மூலம் மட்டும் மொத்தம் ரூ.145 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரம் நிலுவையில் உள்ளது.
திக்குமுக்காடும் வருவாயை மீட்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன், ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் வரி வருவாய் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி இனங்களை விரைந்து வசூலிக்க மேயர் ராமச்சந்திரன் ‘பில் கலெக்டர்களுக்கு’ இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 60 வார்டுகளில் உள்ள 60 பில் கலெக்டர்களுக்கும், அவரவர் வார்டுக்கு ஏற்ற வகையில் தினமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வரி வசூல் செய்திட வேண்டும் என்றும் இலக்கை எட்டாத ‘பில் கலெக்டர்கள்’ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கு ரூ.13 கோடி நிலுவை: இதுகுறித்து சேலம் மாநகராட்சி மண்டல மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாஜலம் கூறியது: சேலம் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் 120 பேருக்கு பணிகொடை, ஓய்வூதிய பலன்களாக ரூ.13 கோடி வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. அலுவல் சார்ந்த ஓய்வூதிய பணியாளர்கள் நீதிமன்றம் மூலம் ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஓய்வூதிய பண பலன்களை சுகாதார பணியாளர்கள் பெருவாரியான பேர் பெற்றிருக்காமல் உள்ளனர். இந்த ஓய்வூதிய பண பலன்களை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டி, மாநகராட்சி மூலம் சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. நகராட்சி நிரவாகத்துறை விரைந்து ஓய்வூதிய பலன்களை வழங்கிட நடவடிக்கை எடுத்தால், சுகாதாரத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் குடும்பம் மகிழ்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு துறை மட்டும் ரூ.34.78 கோடி நிலுவை: மாநகராட்சி எல்லையில் உள்ள அரசு சார்ந்த அலுவலகங்கள், கோயில், மசூதி, சர்ச் உள்ளிட்டவை தொழில் வரி, சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன. அரசு சார்ந்த நிறுவனங்கள் சொத்து வரியாக ரூ.26.36 கோடியும், தொழில் வரியாக ரூ.8.42 கோடியும் என ணொத்தம் 34.78 கோடி நிலுவை வைத்துள்ளன. அரசு சார்ந்த நிறுவனங்களிடம் ‘பில் கலெக்டர்கள்’ நிலுவை வரியை கறாறாக சென்ற வசூலிக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக அந்தந்த அரசு துறை அதிகாரிகள் மாநகராட்சி நிலுவையை விரைந்து செலுத்துவதன் மூலம் திக்குமுக்காடும் மாநகராட்சி நிதி வருவாயை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.