மும்பை குழந்தைகளுக்கான, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ முக பவுடரை, மீண்டும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அறிக்கை
இங்கு, மும்பையின் முலுந்த் என்ற இடத்தில், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் முக பவுடர் தொழிற்சாலை, கடந்த 57 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் பவுடரில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு வேதிப் பொருள் இருப்பதாக, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இயங்கி வரும் மத்திய மருந்து ஆய்வகம் அறிக்கை அளித்தது.
இதன் அடிப்படையில், தொழிற்சாலையின் உரிமத்தை மஹாராஷ்டிரா அரசு ரத்து செய்தது. அதோடு, பவுடர் உற்பத்தியை உடனடியாக நிறுத்தியதுடன், விற்பனை மற்றும் வினியோகத்துக்கும் தடை விதித்தது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தடை தொடரும்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவு:
மும்பையின் முலுந்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மூன்று நாட்களுக்குள் பவுடர் மாதிரிகளை புதிதாக சேகரிக்க வேண்டும்.
அவற்றை இரண்டு அரசு ஆய்வகங்கள் மற்றும் ஒரு தனியார் ஆய்வகத்தில் அளித்து மீண்டும் சோதனை செய்ய வேண்டும்; ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதுவரை, பவுடர் உற்பத்தியை அந்நிறுவனம் தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், விற்பனை மற்றும் வினியோகம் செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்